சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.
சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த மாநாடு, கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், உள்துறைச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
தென்மாநிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் விவாதிக்க உள்ளனர்.
