புதுடில்லி: நீதித்துறை எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாக செயல்படாது என்றும், தனது முடிவுகளை முழுமையாக அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே எடுக்கும் என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
டிடி நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர், இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலராக நீதித்துறை செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நீதித்துறை எந்தவொரு தரப்புக்கோ அல்லது எதிர்த் தரப்புக்கோ ஆதரவாக முடிவெடுப்பதில்லை என்றும், அரசியலமைப்பின் மதிப்புகள் மற்றும் அதன் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்கும் வகையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பே உயர்ந்தது
இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக அரசியலமைப்புச் சட்டம் விளங்குவதாக சூர்யகாந்த் குறிப்பிட்டார்.
சமத்துவம், கண்ணியம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக மாண்புகள் மற்றும் சுதந்திரமான நீதித்துறை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அடிப்படை அரசியலமைப்புக் கட்டமைப்பை பாதுகாத்து, மேலும் வலுப்படுத்துவதே இந்திய நீதித்துறையின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
நாட்டின் சூழ்நிலைகள் மாறினாலும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதை மாற்றுவதற்கு பதிலாக உரிய மரியாதையுடன் வலுப்படுத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
வழக்குகள் நிலுவை குறித்து கருத்து
நீதித்துறையில் வழக்குகள் நிலுவையில் இருப்பது உண்மை என்றும், இது நீதித்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் சூர்யகாந்த் கூறினார்.
நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது நியாயமானது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், ஒவ்வொரு வழக்கையும் ஒரே காலவரையறைக்குள் முடிப்பது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
வழக்குகளை முடிப்பதற்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டுமெனில், அதற்காக ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் காலவரையறையை நிர்ணயிக்கலாம் என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.
