புதுடில்லி: நாட்டில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதுடன், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி ‘பிரிவினை கொடுமையின் நினைவு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினை என்பது வரலாற்றில் ஏராளமான மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்த துயரமான நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினையின்போது பல குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்ததாகவும், எண்ணற்ற மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், அந்த துயரங்களை கடந்து மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியதாகவும், எதிர்கொண்ட சவால்களை சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் பயணம், சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியையும் வலிமையையும் நமக்கு நினைவூட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த கால துயரங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை தொடர்ந்து பேண வேண்டும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
