புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் முழக்கங்களுக்கு மத்தியில், ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026’ மக்களவையில் எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும், நீட் தேர்வு தொடர்பான மாணவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவைக்கு தலைமை தாங்கிய ஜெகதாம்பிகா பால், எம்.பி.க்கள் தங்களது இருக்கைகளுக்குச் சென்று அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், அமளி தொடர்ந்ததால் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது.
எப்சிஆர்ஏ மசோதா ஜேபிசிக்கு அனுப்ப ஒப்புதல்
முன்னதாக, வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்புவதற்கான மத்திய அரசின் தீர்மானம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டுக்குழுவில் மக்களவையைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் இடம்பெற உள்ளனர்.
இந்த குழு தனது அறிக்கையை 2026ஆம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் விவாதத்துக்கு அரசு தயார்
மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், நீட் தேர்வு தொடர்பான மாணவர்கள் போராட்டம் குறித்து உடனடியாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அரசு தரப்பும் பெரும்பாலான உறுப்பினர்களும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் விவாதம் நடைபெறாமல் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
