சென்னை: தமிழகத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பொது நிகழ்ச்சிகளில் மாநில பாடல் பாடப்படுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை கட்டாயமாக்கும் தீர்மானம் கடந்த 10ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ்மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை தமிழக தலைமைச் செயலர் சாய்குமார் பிறப்பித்துள்ளார்.
