புதுடில்லி: பார்லிமென்ட் விவாதங்களில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் விலகிச் செல்வது விரக்தி அளிப்பதாக மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசாங்கம் விவாதம் நடத்த விரும்பும் நிலையில், எதிர்க்கட்சிகள் அதில் பங்கேற்காமல் விலகிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
பார்லிமென்ட் ஜனநாயகத்தில் பொதுவாக எதிர்க்கட்சிகள்தான் விவாதத்தை கோருவார்கள் என்றும், அதற்கு ஆளும் அரசு பதிலளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், தனது அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு அரசு விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், எதிர்க்கட்சிகள் அதிலிருந்து விலகிச் செல்வதை பார்ப்பதாகவும் கூறினார்.
பலமுறை விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார். விவாதம் இல்லாமல் பார்லிமென்ட் எவ்வாறு செயல்பட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், அரசாங்கம் தனது கருத்துகளை பார்லிமென்ட்டில் முன்வைக்கவும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்துவது, முழக்கங்களை எழுப்புவது மற்றும் ஆளும் தரப்பை விமர்சிப்பது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.
கூட்டத்தொடரின் கடைசி நாள் ஆகஸ்ட் 13ஆம் தேதி என்பதால், அதற்கு முன்பாகவே விவாதங்களை தொடங்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
