திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் வழிபட்டு வரும் சுவாமி சிலைகள் மீண்டும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிவன், விநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி, இந்த சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதே பகுதியில் இருந்த சுவாமி சிலைகள் மற்றும் மயில் வாகனம் உள்ளிட்டவை நேற்று மீண்டும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன.
முதல் சம்பவத்திலேயே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றிருக்காது என ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்வதுடன், அப்பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
