சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “போதைப்பொருள் இல்லாத தமிழகம்” என்ற மாநில அளவிலான இயக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் விஜய்க்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
இதையடுத்து, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் விஜய் வாசிக்க, அவரைப் பின்பற்றி மாணவர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், போதைப்பொருள் பயன்பாட்டின் பாதிப்புகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கையும் முதல்வர் விஜய் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பார்வையிட்டார்.
