புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, லோக்சபாவில் இன்று (ஆகஸ்ட் 11) மேலும் இரண்டு மசோதாக்கள் எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லோக்சபாவின் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோதும், சில மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று ‘கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026’ லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றும் வகையில் குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கூட்டுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதர், ‘தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா, 2026’ மசோதாவை முன்மொழிந்தார். அவையில் தொடர்ந்து அமளி நிலவிய நிலையில், இந்த மசோதாவும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
லோக்சபாவில் இதுவரை நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களில், இரண்டு மசோதாக்கள் மீது மட்டுமே விவாதம் நடைபெற்றுள்ளதாகவும், மீதமுள்ள மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமளி நீடித்ததால், லோக்சபா நாளை (ஆகஸ்ட் 12) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் அமளி
ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்ந்து வருகிறது. இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் கூடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.
