சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில், பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிலவிய 92 கிராமங்களில், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.
இதில் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 கிராமங்களும், சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த 50 கிராமங்களும், நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 கிராமங்களும் அடங்கும். சத்தீஸ்கரில் நக்சலிசம் மற்றும் இடதுசாரித் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தின் கீழ் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக வெளிப்புற உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தப் பகுதிகளில், தேசியக் கொடி ஏற்றப்படுவது முக்கியமான மாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
மேலும், இப்பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் அரசு பொதுக் கட்டடங்களுக்கு சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெயர்களை சூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் வீரர்களின் குடும்பங்களை கவுரவிக்கும் வகையில், சுதந்திர தினத்தன்று அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களது வீடுகளுக்குச் சென்று தேசியக் கொடியை வழங்க உள்ளனர்.
