வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் எப்.சி.ஆர்.ஏ. சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவர உள்ள திருத்த மசோதா, அதிக வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் தெளிவான விதிகளை உறுதி செய்யும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நிதியை தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவை பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான விதிமுறைகளை எப்.சி.ஆர்.ஏ. சட்டம் நிர்வகித்து வருகிறது.
இந்த சட்டத்தில் மேலும் கடுமையான விதிகளை கொண்டுவரும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வினய் மோகன் குவாத்ரா, வெளிநாட்டு நிதிப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவது தேசிய பாதுகாப்பு சார்ந்த முக்கிய நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
பல ஜனநாயக நாடுகளிலும் வெளிநாட்டு நிதி பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவது நவீன நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் முதல் எப்.சி.ஆர்.ஏ. சட்டம் 1976ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதாகவும், 2010ஆம் ஆண்டு அது புதிய கட்டமைப்புடன் மாற்றியமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2016, 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம்
2026ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட உள்ள திருத்த மசோதா, அடுத்தகட்ட நடவடிக்கை என்றும், இதன் மூலம் அதிக வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் தெளிவான விதிகள் உறுதி செய்யப்படும் என்றும் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
எப்.சி.ஆர்.ஏ. சட்டம் வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்கு இந்தியர்களை தடை செய்யவில்லை என்றும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்குவதும் அதன் நோக்கம் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சுகாதாரம், கல்வி, பேரிடர் நிவாரணம், ஆராய்ச்சி மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான அமைப்புகள் தொடர்ந்து வெளிநாட்டு நிதியைப் பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிதி அதிகரிப்பு
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நிதியின் அளவு குறையவில்லை என்றும், மாறாக தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
2010-11ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் பெற்ற வெளிநாட்டு நிதி சுமார் 1.2 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2024-25ஆம் ஆண்டில் அது 2.67 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் 30 லட்சத்துக்கும் அதிகமான அரசு சாரா நிறுவனங்கள் இருப்பதாகவும், அவற்றில் 14,450 நிறுவனங்கள் மட்டுமே எப்.சி.ஆர்.ஏ. பதிவை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துகள் தொடர்பான புதிய நடைமுறை
ஒரு அமைப்பின் எப்.சி.ஆர்.ஏ. பதிவு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது திரும்ப ஒப்படைக்கப்பட்டாலோ, அந்த அமைப்பின் வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துகள் ஏற்கனவே அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நடைமுறை 2010ஆம் ஆண்டு முதலே அமலில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2026ஆம் ஆண்டு திருத்த மசோதாவில், அந்த சொத்துகளை பாதுகாக்க குறிப்பிட்ட அதிகார அமைப்பை ஏற்படுத்துவதுடன், பின்னர் பதிவு மீண்டும் வழங்கப்பட்டால் அந்த அமைப்புக்கு பயன்படுத்தப்படாத நிதி மற்றும் சொத்துகளை திரும்ப வழங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்படும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடைய சொத்துகள் இருக்கும் பட்சத்தில், வழிபாட்டு நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் வகையில், அதே மதத்தைச் சேர்ந்த எப்.சி.ஆர்.ஏ. பதிவு பெற்ற மற்றொரு அமைப்பிடம் அந்த சொத்துகளை ஒப்படைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே விதிமுறை
மதம், சமூகம் அல்லது சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் அனைத்து அமைப்புகளுக்கும் எப்.சி.ஆர்.ஏ. விதிகள் சமமாக பொருந்தும் என்றும் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
மதக் கல்வி, வழிபாட்டுத் தலங்களை பராமரித்தல் மற்றும் பல்வேறு மத அமைப்புகள் மேற்கொள்ளும் அறப்பணிகள் உள்ளிட்ட நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
