தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதற்கு, முதல்வர் விஜய் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது சிந்தனை, பண்பாடு மற்றும் நாகரிகத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு” என்பதை தமிழக அரசு முழுமையாக உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை மற்றும் சிறப்பையும், தமிழர்களின் உணர்வுகளையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளதாக முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் தமிழ்த்தாய்க்கு செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றியதற்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் தமிழ்த்தாயின் புகழ் உயர வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் தனது பதிவில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
