தமிழக சட்டப்பேரவையில் காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தமிழகத்தின் உரிமை தொடர்பான பிரச்சினைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பேரவையில் உரையாற்றிய அவர், முந்தைய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் எந்த அரசால் கொண்டுவரப்பட்டிருந்தாலும், மக்கள் நலனுக்காக அவை தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். மேலும், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், நெல் கொள்முதல் தாமதத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேகேதாட்டு அணை திட்டம், காவிரி நீர் பகிர்வு மற்றும் நீட் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்றும், பின்னர் அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டார்.
காவிரி தமிழ்நாட்டின் உரிமை என்றும், அந்த நீரை வழங்குவது கர்நாடகாவின் கடமை என்றும் அவர் கூறினார். மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்றும், இதுதொடர்பாக கர்நாடகா சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவு சரியானது என்றும் தெரிவித்தார்.
“கர்நாடகா செல்லும்போது தமிழக முதல்வருக்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால், ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டு எழும். தமிழக முதல்வரை அவமதிக்க கர்நாடகாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த விவகாரத்தில் மக்கள் மற்றும் விவசாயிகள் முதல்வருக்கு உறுதுணையாக இருப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “எங்களுக்கு உபரி தண்ணீர் தேவையில்லை; தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரைத்தான் கேட்கிறோம்” என்ற அவர், 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு தெரிவித்தாலும், தனது தொகுதியில் இன்னும் மதுக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
