ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (JPSC) நடத்திய போட்டித் தேர்வின் வினாத்தாள் கசிவு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 13-வது நாளை எட்டியுள்ளது.
தலைநகர் ராஞ்சியில் கடந்த ஜூலை 25 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை (ED) போன்ற மத்திய அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (JLKM) கட்சித் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ ஆகஸ்ட் 2 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் இரண்டு மாணவிகள் உட்பட ஐந்து மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற JPSC 14-வது ஒருங்கிணைந்த முதன்மைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும், மேலும் OMR விடைத்தாளில் “Not Attempted” என்ற தனி விருப்பத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தொடர் உண்ணாவிரதத்தால் தேவேந்திர நாத் மஹ்தோவின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், லடாக்கைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் அவரை தொடர்புகொண்டு குறைந்தபட்சம் தண்ணீரையாவது அருந்துமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனை அவர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், தீர்வு காணவும் அமைச்சர்கள் குழுவை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமைத்துள்ளார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், தங்களது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, மாணவர் தலைவர் ராதே குமார், வரும் 10ஆம் தேதி ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
