திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை கிராமம் வழியாக செல்லும் கிருஷ்ணா குடிநீர் கால்வாயில் கடந்த மூன்று மாதங்களாக இரவு நேரங்களில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதன்கிழமை இரவு கழிவுகளை கொட்ட வந்ததாக கூறப்படும் ஒரு வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் இருந்தவர்கள், “காவல்துறை மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கு மாமூல் கொடுத்து தான் இந்த செயல்களில் ஈடுபடுகிறோம். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்” என மிரட்டியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், T8 முத்தாபேட்டை காவல் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பல மணி நேரம் ஆகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், “நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளியுங்கள். இங்கே யாரும் வர மாட்டார்கள்” என சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பேசியதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
கிராம மக்களின் குற்றச்சாட்டுப்படி, கோழி கழிவுகளில் பயன்படும் பகுதிகளை சில தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவிட்டு, மீதமுள்ள கழிவுகளை குடிநீர் கால்வாயில் கொட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் குடிநீர் மாசுபடுவதோடு, துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
