மேகேதாட்டு அணை தொடர்பான திட்டத்திற்கு மத்திய அரசு எந்தவித ஒப்புதலும் வழங்கவில்லை என்றும், 2019-ஆம் ஆண்டு முதல் அந்த திட்டத்தை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி வருவது மத்திய பாஜக அரசே என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், மேகேதாட்டு அணை கட்டுமானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்க முடியாது என மத்திய அரசு தெளிவாக தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேகேதாட்டு அணை தொடர்பான இறுதி அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கே இருப்பதாகவும், அந்த ஆணையத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்து விடாமல் தாமதப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கர்நாடக அரசை விமர்சித்த அவர், ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் போதிய நீர் இல்லாத நிலைக்கு கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடும், தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணி அரசின் அலட்சியமும் காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி மேகேதாட்டு அணை விவகாரத்தில் தீர்வு காண முடியாத நிலையில், பாஜக மீது குற்றச்சாட்டு சுமத்துவது பொருத்தமற்றது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற குற்றச்சாட்டுகளை விடுத்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை, போராட்டம் மற்றும் விவாதங்கள் மூலம் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
