கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் பணியாற்றியவருமான இளங்கோவன், இந்தியாவின் விண்வெளித் துறை வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.
பயணம் இளையோர் மன்றம் சார்பில் நடைபெற்ற கலை, இலக்கியம், நூலகம் மற்றும் விளையாட்டு விழாவில் பங்கேற்ற அவர், மரக்கன்றுகளை நட்டு, மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழாவைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா இதுவரை 100 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு 43 ஆண்டுகள் எடுத்துள்ளதாக கூறினார். உலகளவில் 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 250 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதில், 200 ராக்கெட்டுகள் அமெரிக்காவிலிருந்து ஏவப்பட்டதாகவும், அவற்றில் நாசா வெறும் 7 ராக்கெட்டுகளை மட்டுமே ஏவிய நிலையில், பெரும்பாலான ஏவுதல்களை எலன் மஸ்கின் தனியார் நிறுவனம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவும் விண்வெளித் துறையில் உலக நாடுகளுடன் போட்டியிட வேண்டுமெனில், ராக்கெட் ஏவுதலில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டில் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் ஆண்டுதோறும் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இல்லாத நிலையை சுட்டிக்காட்டிய அவர், பேரிடர் காலங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீனவர்களை விரைவாக கண்டறிந்து மீட்கும் வசதிகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
