தமிழகத்தில் முதலீடுகள் குறைவதற்கு முந்தைய ஆட்சியில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதே முக்கிய காரணம் என அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, பல பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்கியதற்கான காரணத்தை மக்கள் நன்கு அறிந்திருப்பதாக தெரிவித்தார். எது நடந்தாலும் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதால், பல முதலீட்டு வாய்ப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றதாக அவர் கூறினார்.
மேலும், ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சம் பெறப்பட்டதால் முதலீடுகள் தமிழகத்திற்கு வரவில்லை என்றும், தற்போது நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுவதால் முதலீடுகள் இயல்பாக அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இரண்டு மாத ஆட்சியிலேயே மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளதாக கூறிய அவர், தமிழகம் விரைவில் நாட்டின் முன்னணி முதலீட்டு மாநிலமாக உருவாகும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
அதேபோல், நர்ஸ்களின் நலன் தொடர்பாக முதல்வர் விஜய் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்துள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
