கோவையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை தொடர்பாக, தமிழகம், ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட மொத்தம் 16 இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று (ஜூலை 30) சோதனை நடத்தினர்.
கடந்த 2022 அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜமேஷா முபீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை (NIA)க்கு மாற்றப்பட்டது. என்ஐஏ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை, கோவை, ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின்படி, ஜமேஷா முபீன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இரண்டு வழிகளில் நிதி திரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கியதன் மூலமும், கோவை அரபிக் கல்லூரிக்கான நன்கொடை என்ற பெயரில் மோசடி செய்தும் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜமேஷா முபீன் உள்ளிட்ட 12 பேர் கோவை அரபிக் கல்லூரியில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளில் பங்கேற்றதாகவும், ஜமீல் பாஷா என்பவர் அவர்களை வழிநடத்தியதாகவும், அதன் பின்னர் தீவிரவாத சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
