தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே செயல்பாட்டில் இல்லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் இந்த வழக்கை ஒப்படைக்கக் கோரிய மத்திய அரசின் மனுவுக்கு, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு யல்கோல் பகுதியில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு மாநிலங்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து, தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், புதிய தீர்ப்பாயம் அமைப்பதை விட, தற்போது பயன்பாட்டில் இல்லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் இந்த வழக்கை மாற்றினால் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றும், விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்து மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சதீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் தரப்பு, தென்பெண்ணையாறு பிரச்சினைக்கு நிரந்தரமான தனி தீர்ப்பாயம் அமைப்பதே சரியான தீர்வாகும் என்றும், ஏற்கெனவே உள்ள தீர்ப்பாயத்தை பயன்படுத்தினால் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் நியமனத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வாதிட்டது.
கர்நாடக அரசு தரப்பும் மத்திய அரசின் மனுவுக்கு எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்வதாக தெரிவித்தது. இதையடுத்து, மத்திய அரசின் மனு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
