மத்திய அரசுப் பணியில் இருந்து தமிழக அரசுப் பணிக்கு திரும்பிய 1992-ம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் லக்கானி, தமிழக அரசின் பல்வேறு முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியவர். கடந்த 2025-ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட அவர், நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக இணைச் செயலர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார். 2029-ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் தொடர நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ளார்.
அவரது வருகையைத் தொடர்ந்து, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் நில நிர்வாக ஆணையர் என்ற பதவி ஓராண்டு காலம் அல்லது தேவையுள்ள வரை தற்காலிகமாக உருவாக்கப்பட்டு, அதில் ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலர் எம். சாய்குமாருக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ராஜேஷ் லக்கானியின் நியமனம் நிர்வாக வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதனுடன், தமிழகத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ஏ. சிவஞானம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவியும் ஓராண்டு காலம் அல்லது தேவைப்படும் வரை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பேரிடர் மேலாண்மை ஆணையர் பதவி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதவிக்கு இணையான அந்தஸ்துடையது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
