சென்னை: டில்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் போர்வையில் தேச விரோத சக்திகள் பங்கேற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாணவர்களை தூண்டிவிட்டு ராகுல் காந்தி அவர்களின் பின்னால் ஒளிந்து கொள்வதாகவும் அவர் விமர்சித்தார்.
சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகம் கமலாலயத்தில், புதிய உழைப்பாளர் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
டில்லியில் நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் பெயரில் தேச விரோத சக்திகள் ஊடுருவியுள்ளதாகவும், பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களின் பின்னால் மறைந்து கொள்வது ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும், இது காங்கிரசின் கோழைத்தனத்தை காட்டுவதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
மேலும், ராகுல் காந்தியின் நடவடிக்கையை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக நடத்த உள்ளதாகவும், டில்லி போராட்டத்தில் பாலஸ்தீனக் கொடி ஏந்தப்படுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
தமிழக அரசையும் விமர்சித்த அவர், அமைச்சர்கள் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாடு செல்வதாகவும், திரைப்படங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் அமைச்சரவை உலகில் எங்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.
