நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியில் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர்ந்து 2-வது நாளாக மூடப்பட்டுள்ளன.
டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க டில்லி போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். போராட்டங்களின் போது ஏற்பட்ட மோதல்கள், தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்றும் மூடப்பட்டிருப்பதாக டில்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூடப்பட்டுள்ள மெட்ரோ நிலையங்கள்:
- லோக் கல்யாண் மார்க்
- ராஜீவ் சவுக்
- படேல் சவுக்
- ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க்
- பாராகம்பா சாலை
- உச்ச நீதிமன்றம்
- சேவா தீர்த்
- ஜன்பத்
- மண்டி ஹவுஸ்
- மத்திய தலைமையகம்
- ஐடிஓ
- டில்லி கேட்
- இந்திரப்பிரஸ்தா
- கான் மார்க்கெட்
- ஜோர் பாக்
- சிவாஜி ஸ்டேடியம்
