நீட் தேர்வு மற்றும் மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பார்லிமென்டில் நேரடியாக விவாதிக்க வருமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பு விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் பார்லிமென்டில் விரிவாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜ) அரசு முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த விவாதத்தில் பங்கேற்காமல் விலகி நிற்பதாகவும், பார்லிமென்டுக்கு வந்தால் அவர்களின் இரட்டை நிலைப்பாடு மக்களுக்கும் இளைஞர்களுக்கும் தெரியவரும் என்பதால் விவாதத்தைத் தவிர்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பாஜ எம்.பி.க்களும் மத்திய அரசும் எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறிய நிதின் நபின், கடந்த பல தசாப்தங்களாக இளைஞர்களை தவறாக வழிநடத்தி வந்த வரலாற்றின் காரணமாகவே காங்கிரஸ் பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என்றும் விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
