15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், இத்தகைய சட்டத்தை அமல்படுத்திய முதல் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்கள் சிறார்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, சிறார்களின் இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதிபர் மேக்ரானின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டம், குழந்தைகளை தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள், இணையத் துன்புறுத்தல் மற்றும் மனநல பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் பரவலான வரவேற்பு தெரிவித்துள்ளன.
பிற நாடுகளில் நிலை என்ன?
சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உலகின் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- ஆஸ்திரேலியா மற்றும் மலேஷியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- டென்மார்க் இந்த வகைத் தடையை அறிவித்துள்ள நிலையில், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
- நார்வே, சீனா, ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.
