நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், லோக்சபாவில் பேசிய கிரண் ரிஜிஜூ, கடந்த மூன்று நாட்களாகவே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அரசு முன்வந்துள்ளதாக கூறினார்.
மேலும், நாடாளுமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும், அதற்கான நடைமுறைகள் குறித்து அனைத்து கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்ய எதிர்க்கட்சிகளுக்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளதாகவும் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் அரசியல் கட்சிகளின் நலன்களை விட மிக முக்கியமானது என்றும், இந்த விவாதம் வெறும் ராஜினாமா கோரிக்கையுடன் முடிவடையாமல், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நேரடியாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
