தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலத்தில் சுமார் 10 டன் எடையுள்ள கேரளாவைச் சேர்ந்த கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதாகக் கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாக நினைக்கும் அண்டை மாநிலத்தின் அணுகுமுறையையும், இதைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் தமிழக அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளார்.
மேலும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மூட்டைகளில் மலையாள எழுத்துகள் மற்றும் கேரள பதிவு எண்கள் கொண்ட வாகனங்களின் அடையாளங்கள் இருப்பதாகவும், அங்கு பிளாஸ்டிக், மின்னணுக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கழிவுகள் ஜம்பு நதி, விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் கோயில் நிலங்களைப் பாதுகாப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, கோயில் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள சுமார் 10 டன் கழிவுகளையும் உடனடியாக கேரளாவிற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டியவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
