இந்தியா உலக அரங்கில் சூப்பர் பவர் நாடாக உருவெடுத்து வருவதாகவும், ஐக்கிய நாடுகள் (ஐநா) பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் பனாமா வெளியுறவு அமைச்சர் ஜேவியர் எடுரோ தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “இன்றைய உலகம் 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலையைப் போல இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சர்வதேச அரங்கில் முக்கிய சக்தியாக வளர்ந்து வருகிறது. எனவே தற்போதைய உலக நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச அமைப்புகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.
மேலும், ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க பனாமா வலுவான ஆதரவை தெரிவிப்பதாகவும், அதேபோல் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் நிரந்தர பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன் மூலம் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அனைத்து பிராந்தியங்களின் குரலும் சமமாக பிரதிபலிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பு உருவாகும் என்றும் ஜேவியர் எடுரோ தெரிவித்தார்
