தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
பழநி கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் 14 பேரை கைது செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. இதேபோன்று மாநிலத்தின் பிற கோயில் நிலங்களிலும் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொருளாளர் ஆதிசேஷன், பழநி நில மோசடி விவகாரத்தில் நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இதுதொடர்பாக இயக்கத்தின் மாநில பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள், கோயில் நிர்வாகம் மற்றும் நிதி சார்ந்த விவரங்களை மக்களிடம் வெளிப்படையாக விளக்கும் வகையில் தற்போதைய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேபோல், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்காக ஆகம விதிகளை மீறி கோயில்களை திறந்து சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது என்றும், அனைத்து கோயில்களின் சொத்துப் பட்டியலையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கோயில் சொத்துகளின் குத்தகை மற்றும் வாடகை ஒப்பந்தங்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்பட்டு, அரசின் வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார். கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை தகுதியின் அடிப்படையில் நிரப்ப வேண்டும், தரிசனக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.
