மத்தியப் பிரதேச சட்டசபையில் பொது சிவில் சட்ட (Uniform Civil Code – UCC) மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக, திருமணமான தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வாடகைத்தாய் (Surrogacy) மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சமமான சட்ட உரிமை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், பலதார மணத்திற்கு தடை விதிக்கும் வகையிலும், மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்கும் ‘முத்தலாக்’ முறையை குற்றமாகக் கருதும் விதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் வாழும் ஜோடிகள், ஒன்றாக வாழத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் தங்களது உறவை பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ₹10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் மசோதா பரிந்துரைக்கிறது.
இதற்கு முன்பு உத்தராகண்ட், குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களும் பொது சிவில் சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
