உலக சதுரங்க நாளையொட்டி, சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழகம் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் வீரர்கள் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டார். அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
உலக அரங்கில் சதுரங்கத்தின் முக்கிய மையமாக தமிழகம் உருவெடுத்து வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களை கற்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சதுரங்கத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து வகையிலும் தேவையான ஆதரவையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என்றும் முதல்வர் விஜய் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்
