வாஷிங்டன்: அமெரிக்காவின் தேர்தல் உள்கட்டமைப்பை பாதிக்கும் திறன் சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இருப்பதாகவும், 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை சீனா திருடியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பின் பாதுகாப்பு குறித்து பல ஆண்டுகளாக மக்களிடம் தவறான தகவல்கள் கூறப்பட்டதாக தெரிவித்தார். தேர்தல் உள்கட்டமைப்பு இணையவழி தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா மற்றும் சில அரசு சாரா அமைப்புகள் அமெரிக்க தேர்தல் அமைப்பை சீர்குலைக்கும் திறன் கொண்டுள்ளன என்று கூறிய அவர், தேர்தல் முறையில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்றார்.
ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்கு பாதுகாப்பாக பதிவாகும் என்ற நம்பிக்கையை பெற வேண்டும் என்றும், வாக்களிக்க அமெரிக்கக் குடியுரிமை ஆவணங்களை கட்டாயமாக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், டிரம்பின் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் லியு சாங், அமெரிக்க தேர்தல் என்பது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றும், சீனா கடந்த காலத்திலும் அமெரிக்க தேர்தலில் தலையிடவில்லை, இனியும் தலையிடாது என்றும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளை அமெரிக்க மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
