முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வரும் ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 19 முதல் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம், தணிக்கைச் சான்றிதழ் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தையும் நாடியதால் வெளியீடு மேலும் தாமதமானது.
இந்நிலையில், கடந்த ஜூலை 9ஆம் தேதி தணிக்கை வாரியம் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியது. மேலும், படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என அறிவிக்கப்பட்டது.
திரைப்பட வெளியீட்டை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பதிவில், “நெருப்பால் சோதிக்கப்பட்டது… காலத்தால் செதுக்கப்பட்டது… வரலாற்றிற்காக உருவாக்கப்பட்டது. போர் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, வெற்றியின் முழக்கம் அவ்வளவு சிறந்ததாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், படத்தின் தொடக்க டைட்டில் கார்டில் வழக்கமாக இடம்பெறும் ‘தளபதி விஜய்’ என்ற பெயருக்கு பதிலாக ‘மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ என இடம்பெறவுள்ளதாக கூறப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
