திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4வது அணு உலை கட்டுமானப் பணிகள் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘வோர்ல்ட் லீக்ஸ்’ என்ற ஹேக்கர் குழு, மொத்தம் 8.58 லட்சம் ஆவணங்களில் இருந்து சுமார் 19,000 முக்கிய ஆவணங்களை டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள், அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4வது அலகு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ரிலையன்ஸ் குழுமத்தின் மூன்றாம் தரப்பு சர்வரில் இருந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரின் சர்வரில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த வகையான ஆவணங்கள் கசிந்துள்ளன என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கசிந்த ஆவணங்களில் 2016 முதல் 2025 மே மாதம் வரை சேமிக்கப்பட்டிருந்த வென்டிலேஷன் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள், பொது கட்டுப்பாட்டு அறை வரைபடங்கள், கருவிகள் பரிசோதனை விவரங்கள், சப்ளையர் பட்டியல் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவனம் வடிவமைத்த அணு உலையின் முக்கிய மைய அமைப்பு தொடர்பான வடிவமைப்புகள் கசிந்த ஆவணங்களில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்த தகவல் கசிவு தொடர்பாக இந்திய அணுசக்தி மின்சார கழகமும், இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
