தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பக்ரீத் பண்டிகையின்போது பொது இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து சட்டவிரோதமாக பசுக்கள் வதைக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு, பக்ரீத் உள்ளிட்ட எந்த நாளிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்றும், உரிய உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகளை வதைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தது. நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு தமிழக அரசின் வாதங்களை கேட்ட பிறகு, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் கே. சூர்யா பிரசாந்த், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP), கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
