வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரரும், அவசர மருத்துவ நிபுணருமான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது முதல் பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார்.
49 வயதான அனில் மேனன், ஜூலை 14-ஆம் தேதி கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தின் சோயுஸ் எம்.எஸ்.-29 விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்ர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினாவுடன் விண்வெளிக்குப் புறப்பட உள்ளார். இந்த பயணம் சுமார் எட்டு மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மற்றும் உக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவின் மினியாபோலிஸில் பிறந்த அனில் மேனன், மருத்துவம், ராணுவம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய அவர், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளிலும் மருத்துவ சேவையாற்றியுள்ளார். மேலும், எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு மருத்துவ உதவியும் வழங்கியுள்ளார்.
இந்தியாவில் ரோட்டரி அறக்கட்டளையின் தூதரக அறிஞராக ஓராண்டு பணியாற்றிய அனில் மேனன், போலியோ தடுப்பூசி இயக்கத்திலும் பங்களித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு நாசாவில் விமான அறுவை சிகிச்சை நிபுணராக இணைந்த அவர், பின்னர் 2018-ல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் மருத்துவத் திட்டத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார்.
2021-ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்ட அவர், இரண்டு ஆண்டுகள் நீடித்த கடுமையான பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது தனது முதல் விண்வெளி பயணத்திற்கு தயாராகியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் காலத்தில், நீண்டகால விண்வெளி பயணம் மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மருத்துவ ஆதரவை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளை அனில் மேனன் மேற்கொள்ள உள்ளார்.
