ஜகார்த்தா: மூன்று நாடுகள் கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில், ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, மருந்து, அரிய கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ராணுவ ஒத்துழைப்பு
இந்த ஒப்பந்தங்களின் முக்கிய அம்சமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் மற்றும் அஸ்திரா ஏவுகணைகளை இந்தோனேஷியாவுக்கு வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பாதுகாப்புத் தொழில்நுட்பம், ராணுவத் தொழில்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன.
கடல்சார் பாதுகாப்பு
இந்தோனேஷியாவின் ஆச்சே மாகாணத்தில் அமைந்துள்ள சபாங் துறைமுகத்தை இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. மலாக்கா ஜலசந்தியை கண்காணிக்கும் முக்கிய இடத்தில் உள்ள இந்த துறைமுகம், இந்தியா–இந்தோனேஷியா கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கு புதிய முக்கியத்துவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீல பொருளாதாரம் மற்றும் கடல்சார் வர்த்தக வளர்ச்சியிலும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரிய கனிமங்கள் மற்றும் தொழில்
அரிய வகை கனிமங்களின் விநியோகத் தொடரை வலுப்படுத்தும் நோக்கில், இந்தோனேஷியாவில் நிக்கல், உருக்கு மற்றும் அரிய மண் காந்தங்கள் உற்பத்தித் துறைகளில் இந்தியா முதலீடு செய்ய உள்ளது. அதோடு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அரிய மண் காந்தங்கள் தயாரிப்பிலும் இரு நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன.
டிஜிட்டல் பரிவர்த்தனை
இந்தியாவின் யு.பி.ஐ. (UPI) டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை, இந்தோனேஷியாவின் கட்டண அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் இரு நாடுகளின் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு பணப் பரிவர்த்தனைகள் மேலும் எளிதாகும்.
ஒப்பந்தங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியா–இந்தோனேஷியா உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாகவும், இந்த நட்புறவு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், மேற்காசிய நிலவரம் மற்றும் பாலஸ்தீன விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறினார். பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடுகள் தீர்வு (Two-State Solution) என்ற இந்தியாவின் நிலைப்பாடு தொடரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
