ஜகர்த்தா: மூன்று நாடுகள் கொண்ட வெளிநாட்டு பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராம்பனன் ஹிந்து கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் பிரம்மோஸ் மற்றும் அஸ்ட்ரா ஏவுகணைகள் தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் உயரிய குடிமக்கள் விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருது பிரதமர் மோடிக்கு அதிபர் பிரபோவோ சுபியான்டோவால் வழங்கப்பட்டது.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இரு தலைவர்களும் ஹெலிகாப்டரில் ஜாவா தீவில் அமைந்துள்ள பிராம்பனன் கோவிலுக்கு சென்றனர். கோவிலின் பிரமாண்டமான கோபுரங்களை வானில் இருந்து ரசித்த பிரதமர் மோடி, பின்னர் கோவிலுக்குள் சென்று தீபாராதனையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த பயணத்தின் புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிராம்பனன் கோவில், சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஹிந்து ஆலயமாகும். சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் 240 சன்னதிகளுடன் அமைந்துள்ள இந்த கோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு பணிகளில் இந்திய தொல்லியல் துறை முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
