‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ (Viksit Bharat GRAMEEN Rozgar & Aajeevika Mission) திட்டத்தை செயல்படுத்துவதற்காக, முதல் தவணையாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ.25,863 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.2,176.84 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய திட்டம், முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக செயல்படுத்தப்படுகிறது. புதிய திட்டத்தின் கீழ், கிராமப்புற தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், திட்ட நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசுகளும் வழங்கும் வகையில் புதிய நிதி பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது முதல் தவணை நிதி விடுவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், திட்டம் நாடு முழுவதும் எந்த தொழில்நுட்ப சிக்கலும் இன்றி சுமுகமாக அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை காலதாமதமின்றி வழங்குவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு என்றும், மாநில அரசுகள் தங்களது பங்கையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், திட்டத்தை முதல் நாளிலேயே சிறப்பாக செயல்படுத்திய ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை அமைச்சர் பாராட்டினார். அதேவேளையில், ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
