மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, கலவரம் அல்லது வன்முறையின் போது அரசு மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோரிடம், ஏற்பட்ட சேதத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
அண்மையில் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு புதிய சட்ட மசோதாக்கள், பொது அமைதியை பாதுகாப்பதற்கும், திட்டமிட்ட வன்முறை மற்றும் சதிச் செயல்களை தடுக்க அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனது தொகுதியில் நடைபெற்ற தொழில் துறையினர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், “அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது வன்முறையாக மாறி அரசு அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து சேதமடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மூன்று கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அபராதத்தை செலுத்த மறுத்தால், அவர்களது சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டு அந்த தொகை அரசால் வசூலிக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.
கூட்டத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர், உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்கள் தரமான திட்டங்களுடன் முன்வந்தால், அவற்றை மேற்கு வங்கத்தில் அமைக்க அரசு முழு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
