டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் தேசப்பற்று, தியாகம் மற்றும் பொதுச்சேவையை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் தேசிய உணர்வுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த தலைவராக அவர் விளங்கியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள கட்டுரையில், “பாரத அன்னை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் தார்மீக உறுதியின் அடையாளமாக டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி திகழ்ந்தார். இந்தியப் பிரிவினை காலத்திலும் மேற்கு வங்கம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தொடர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக செயல்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்புக்காகவும் முகர்ஜி தொடர்ந்து போராடியதாகவும், சிறைவாசம் மற்றும் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்ட அவர், தனது கொள்கைக்காக உயிரையே தியாகம் செய்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதை, அவரது தியாகத்திற்கு செலுத்தப்பட்ட மரியாதையாக அவர் விளக்கியுள்ளார்.
நாட்டின் முதல் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக இருந்த முகர்ஜி, தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம், சிந்திரி உரத் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்ததையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். அதே நேரத்தில் இந்தியாவின் பாரம்பரிய வளங்களையும் பாதுகாக்க அவர் முக்கியத்துவம் அளித்ததாக கூறினார்.
1943-ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்து மனிதநேய பணியில் ஈடுபட்டதையும், 1942-ஆம் ஆண்டு மேதினிப்பூரில் ஏற்பட்ட புயலுக்குப் பின்னர் மீட்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டதையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.
இறுதியாக, வலிமையான, ஒற்றுமையான, தன்னம்பிக்கையுடன் கூடிய கருணைமிக்க இந்தியாவை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவதே டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும் என்றும், அந்த இலக்கை இளைஞர்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
