இஸ்ரேலுக்கு அமெரிக்காவைத் தவிர சக்திவாய்ந்த கூட்டாளிகள் இல்லை என்ற அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்த கருத்துக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய நெதன்யாகு, “இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான நண்பர்களில் ஒன்று. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் அந்த நாட்டில், இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், எங்களுக்கு வேறு பல நட்பு நாடுகளும் உள்ளன” என்றார்.
மேலும், “இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ஜே.டி. வான்ஸை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் நான் ஏற்கிறேன் என்று அர்த்தமில்லை. அதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.
அமெரிக்க துணை அதிபரின் கருத்துக்கு நெதன்யாகு அளித்த இந்த பதில், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
