தஞ்சாவூரில் கோவில் திருப்பணி ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட பெண் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் தீபாம்பாள்புரம் பகுதியில் உள்ள மங்களாம்பிகை சமேத வன்மீகநாதர் கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மதியழகன் மேற்கொண்டு வருகிறார்.
திருப்பணி தொடர்பான நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, தஞ்சாவூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ஜோதிலட்சுமி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொகையை தனது தோழி கிரிஜா மூலம் வழங்குமாறும் அவர் தெரிவித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லஞ்சம் வழங்க விரும்பாத ஒப்பந்ததாரர் மதியழகன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், குறியீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தை ஜோதிலட்சுமி மற்றும் கிரிஜாவிடம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த நடவடிக்கை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
