தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய மாநில பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை உருவாக்கும் நோக்கில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020)-க்கு மாற்றாக, தமிழக அரசு கடந்த ஆண்டு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமையிலும், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையிலும் பாடத்திட்ட வடிவமைப்பு குழு செயல்பட்டு வந்தது. தற்போது அந்த குழுவை கலைத்து, ‘மாநில பாடத்திட்டம் மற்றும் பாடநூல் உருவாக்கம்’ என்ற புதிய குழுவை அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) விஞ்ஞானி வெங்கடேஷ்வரன், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் உள்ளிட்ட மொத்தம் 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர்களும் குழு உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
