புட்காம்: தேர்தல் வெளிப்படைத்தன்மையில் உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்கிறது என்று மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளமாக செயல்படும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடியதாக கூறினார்.
வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தலின் ஒவ்வொரு கட்டமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த வலுவான தேர்தல் நடைமுறைகளால் உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளில் தேர்தல் வெளிப்படைத்தன்மையில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிப்பதும் நாட்டின் தேர்தல் நிர்வாகத்தின் சிறப்பை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
