அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 14 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா 30 நாட்களுக்குள் ஈரானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைகளை திரும்பப் பெற வேண்டும். மேலும், ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் அடுத்த 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, அடுத்த 60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்றும், செறிவூட்டப்பட்ட அணுசக்தி பொருட்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் அழிக்கும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட ஈரானின் மறுசீரமைப்புக்காக அமெரிக்கா ரூ.28 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவி வழங்க உறுதியளித்துள்ளதாகவும், ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை கட்டங்களாக நீக்குவதற்கான கால அட்டவணை இறுதி ஒப்பந்தத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
