திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் 3 வயது குழந்தை காணாமல் போனதைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அருகிலிருந்த முட்புதரில் பலத்த காயங்களுடன் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. விசாரணையில், குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் நான்கு பேர் இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இந்த கொடூரச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் மீது விரைவாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
