அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா இணைந்து நடத்தும் 23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் நாள் ஆட்டங்களில் மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா அணிகள் வெற்றி பெற்று தங்களது பிரசாரத்தை வெற்றிகரமாக தொடங்கின.
மெக்ஸிகோ 2-0 தென்னாப்பிரிக்கா
மெக்ஸிகோ சிட்டியில் உள்ள Estadio Azteca மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய மெக்ஸிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் ஜூலியன் கினோனெஸ் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்ஸிகோவுக்கு 67-வது நிமிடத்தில் ரௌல் ஜிமெனெஸ் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். இதனால் மெக்ஸிகோ எளிதாக வெற்றியை வசப்படுத்தியது.
இந்த ஆட்டத்தின் முக்கிய அம்சமாக 3 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டன. உலகக் கோப்பை வரலாற்றில் தொடக்க ஆட்டத்தில் 3 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
மேலும், உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் 8-வது முறையாக விளையாடிய மெக்ஸிகோ, முதல்முறையாக அந்த போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியா 2-1 செக் குடியரசு
மெக்ஸிகோவின் Estadio Akron மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது.
முதல் பாதி கோல் இன்றி முடிவடைந்த நிலையில், 59-வது நிமிடத்தில் செக் குடியரசின் லாடிஸ்லாவ் கிரெஜ்சி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
எனினும், 67-வது நிமிடத்தில் வாங் இன்பேயோம் கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார். தொடர்ந்து 80-வது நிமிடத்தில் ஓஹ் ஹியோங்யு வெற்றிக்கான கோலை பதிவு செய்ததால் தென் கொரியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டியில் ஐரோப்பிய அணிக்கு எதிராக தென் கொரியா தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் 2018-ல் ஜெர்மனியையும், 2022-ல் போர்ச்சுகலையும் வீழ்த்தியிருந்தது.
