சென்னை: மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு வாகனத்திற்கு ஒரு நாளில் 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்வும், பயன்பாட்டில் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு சமையல் எரிவாயு ஆகியவை மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஏற்படும் இழப்புகளை மத்திய அரசு ஏற்று வருகிறது. இதற்கிடையில் சிலர் அச்சம் காரணமாக அதிக அளவில் எரிபொருளை வாங்கி சேமித்து வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலை கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தை ஒழுங்குபடுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மொத்த வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்குகளில் இருந்து எரிபொருள் வாங்காமல், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் பங்குகளில் டீசலை வாகனங்களில் மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும், ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு ஒரு நாளில் 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. வாங்கப்பட்ட டீசலை மறு விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கும் வகையில் மாநில அரசு மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
