இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ‘ஏ’ அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி விரைவில் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த பிரியன்ஷ் ஆர்யா மற்றும் Ruturaj Gaikwad கூட்டணி அணியை மீட்டது.
பிரியன்ஷ் ஆர்யா 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ருதுராஜுடன் இணைந்த கேப்டன் Tilak Varma சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தனர்.
ருதுராஜ் 101 ரன்கள் குவித்து சதமடித்தார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் இடம்பெற்றன. திலக் வர்மா 60 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.
278 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பின்னர் சதீரா சமரவிக்ரமா மற்றும் கேப்டன் சஹன் ஆராசிகே இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
சஹன் ஆராசிகே 74 ரன்கள் எடுத்து போராடிய போதிலும், கடைசி கட்டத்தில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெற்றிக்கு 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், கடைசி 10 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் இலங்கை ‘ஏ’ அணி 48.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் Arshad Khan, அனுகுல் ராய், விப்ராஜ் நிகம் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை ஜூன் 11-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
